Banner 468 x 60px

 

Monday, November 24, 2014

உண்மையான பக்தி இருந்தால்....

0 Facebook
தங்கத்தை புடம் போடுவதும், வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர, அதை அழிப்பதற்காக அல்ல. நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும், கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப்படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால், மனமானது சாந்தம் அடையும். 
பாண்டுரங்கனின் மீது மிகுந்த பக்தி கொண்ட அடியவர் ஒருவர் இருந்தார்; அவர் மனைவியின் பெயர் கமலாபாய். யாசகம் கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் தங்கள் செல்வத்தை வாரிக் கொடுத்த அந்தக் குடும்பம், ஒரு காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடியது.

ஒருநாள், தன்னிடமிருந்த ஒரே மாற்றுத் துணியை துவைத்து காய போட்டு விட்டு, குளிக்கச் சென்றிருந்தார் கமலா பாய். வீட்டிற்குள் பாண்டுரங்க பூஜையில் ஈடுபட்டு, தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார் அவரின் கணவர். அப்போது வாசலில்,'ஐயா... தர்மம் செய்யுங்கள்...' என்ற தீனமான குரல் கேட்டு, பக்தர் வெளியில் வந்து பார்த்தார். கந்தலான புடவை அணிந்திருந்த பெண் ஒருவர், 'ஐயா... இந்த வீட்டில் ஏழைகளுக்குத் துணியும், தானியமும் தருவதாக கேள்விப்பட்டேன்; ஏதாவது தர்மம் செய்யுங்கள்...' எனக் கேட்டார்.

அந்த பெண்ணுக்கு தர்மம் செய்ய வீட்டில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்று பார்த்தார்; எதுவும் இல்லை. மனைவி கமலாபாயின் மாற்றுப் புடவை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. உடனே, அந்த புடவையை எடுத்து, அந்த ஏழைப் பெண்ணுக்கு தர்மம் செய்து விட்டார். 

சிறிது நேரத்தில், குளித்து, ஈரப் புடவையுடன் வந்த கமலா பாய், நடந்ததை அறிந்து, 'இவ்வளவு நாட்களாக உங்களுக்கு எல்லா விதங்களிலும் அனுசரணையாக இருந்த எனக்கு, ஒரு மாற்றுப்புடவைக்கு கூட வழி இல்லாமல் செய்து விட்டீர்களே...' என்று கோபப்பட்டாள்.

பக்தரோ, 'கோபப்படாதே கமலா... பண்டரிநாதன் திருவடிகளை சரண் அடை; பகவான் கை விட மாட்டான்...' என்று ஆறுதல் கூறினார்.
கமலாபாயோ, 'பகவானாம்... பாதமாம்... அவன், தன் திருவடிகளில் விழுந்த பக்தர்களை மிதிக்கத்தான் செய்கிறானே தவிர, காப்பாற்றுவது இல்லை; அவன் பாதங்களை நசுக்குகிறேன். பகவானுக்கு பாதங்களே இருக்கக் கூடாது...' என்று கோபத்துடன் ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு வெறிபிடித்தவள் போல கோவிலை நோக்கி ஓடினாள்; பக்தரும் பின்னாலேயே ஓடினார்.

பாண்டுரங்கன் சன்னிதி முன் நின்று, 'பாண்டுரங்கா... உன் பாதங்களில் விழுபவர்களை நீ அளவுக்கு மீறி சோதனை செய்கிறாய்; அதனால், உன் பாதத்தை நசுக்கப் போகிறேன்...' என்று உரத்த குரலில் கூறி, கல்லை ஓங்கினாள்.

அதற்குள், பின்னால் வந்த அவள் கணவர் ஓடிப் போய் பாண்டுரங்கன் திருவடிகளில் விழுந்து, மறைத்துக் கொண்டார். கமலா பாய் எறிந்த கல், குறி தவறி தரையில் விழுந்து உடைந்து சிதறியது.
என்ன ஆச்சரியம்!

உடைந்த கற்கள் யாவும் நவரத்தினங்களாகவும், வைடூரியங்களாகவும் சிதறின.அப்போது, ருக்மணி தேவி காட்சியளித்து, 'கமலா... உங்கள் தர்மக் குணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே, ஏழைப் பெண்ணாக வந்து, உன்னுடைய மாற்றுப் புடவையை தானமாக பெற்றேன். 

கோபத்தை தவிர்த்து, உத்தமரான உன் கணவரை அனுசரித்து நட; உனக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்...' என்று, கூறி, மறைந்தாள்.
'தாயே... ருக்குமணி தேவி... மனித ஜீவன்களுக்கு மன பக்குவமும், வைராக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காகத் தான், நீ சோதனை செய்கிறாய் என்பதை உணராமல் போனேனே...' என்று அழுதவள், தன் கணவரான துகாராமின் கால்களில் விழுந்து வணங்கினாள். ஆம்... கமலாபாயின் கணவரான அந்த உத்தம பக்தர், துகாராம் தான்!
பாண்டுரங்கன் அடியார்களில் தலை சிறந்தவரான துகாராம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது.

சிதறிக் கிடந்த நவரத்தினங்களை தொடாமல் துகாராமுடன் வெளியேறினாள் கமலாபாய்.
கடவுள் கொடுத்த வாழ்க்கையில், அவன் நம்மை ஆட்கொள்ளும் விதமாக கொடுக்கும் சோதனைகளை, அவன் பாதங்களை சரணடைவதன் மூலமே வெல்ல முடியும் என்பதை விளக்கும் கதை இது.

0 Facebook:

Post a Comment

 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini