இந்த மாதம் டிசம்பர் 16-ல் சனி பெயர்ச்சியாகிறார். இதுவரை 7-ல் இருந்த சனி இப்போது 8-ஆம் இடத்துக்கு அட்டமத்துச் சனியாக மாறுகிறார். விருச்சிகச் சனி 3-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குருவும் பார்க்கிறார். 10-ஆம் இடமென்பது தொழில்,வாழ்க்கையைக் குறிக்குமிடம் என்பதால், 10-க்குடையவரே பார்ப்பதோடு, தர்மகர்மாதிபதி யோகப்படி 9-க்குடையவரும் பார்ப்பதால் தொழில்துறையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அடிப்படை பாதிப்புக்கு இடமிருக்காது. குடும்பத்தில் சிலருக்கு முன்னேற்றம் கருதிய மாற்றங்கள் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழும் சூழ்நிலையும் ஏற்படும். கணவர் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று பிரிந்து வேலை பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த மாதம் டிசம்பர் 16-ல் சனி பெயர்ச்சியாகிறார். இதுவரை 6-ல் இருந்த சனி இப்போது 7-ஆம் இடத்துக்கு மாறுகிறார். 7-ல் வரும் சனி கண்டச் சனி என்பதால் கண்டம் வருமென்று அர்த்தமில்லை. சனி 4-ஆம் இடத்தை 10-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் வாகன வகையில் மாற்றங்கள் உண்டாகும். உங்களது தளராத நம்பிக்கையும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் உங்களை படிப்படியாக உயர்த்தும். சிலருக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்களும் பிரச்சினைகளும் உருவாகலாம். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்கு சோதனை ஏற்பட்டாலும் பெரிதளவு பாதிப்பு உண்டாகாது. மாதப் பிற்பகுதியில் சில நல்ல பலன்களை சந்திக்கலாம். சில காரியங்கள் தாமதப்படலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாம். அவை நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்லமுறையில் நடந்தேறும்.
மிதுனம்
இந்த மாதம் டிசம்பர் 16-ல் சனி உங்கள் ராசிக்கு 5-ல் இருந்து 6-ல் மாறுகிறார். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் வரும்போது கூறுபொன் பொருளுண்டாம்; குறைவிலா செல்வமுண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்; காறுபால் அஷ்டலட்சுமி கடாட்சமும் உண்டாம்' என்பது பாடல். அந்தவகையில் உங்களுக்கு அஷ்டலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும். ஒருசிலருக்கு தொழில்துறையில்- வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டாலும், 10-க்குடைய குரு மிதுன ராசிக்கு 2-ல் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தையும் கேதுவையும் பார்ப்பதால் அவையெல்லாம் அடிபட்டுப்போகும். வைத்தியச்செலவு விலகும். கடன் குறையும். விமர்சனங்கள் குறையும். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமையும் அன்யோன்யமும் இருக்கும்.
கடகம்
இந்த மாதம் சனி உங்கள் ராசிக்கு 4-ல் இருந்து 5-ஆம் இடத்துக்கு மாறுவார். சிந்தையில் வகுத்த திட்டங்கள் சீராகச் செயல்படுவதோடு சந்தோஷமும் மனநிறைவும் ஏற்படும். எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை எல்லாம் மறைந்துவிடும்; பொசுங்கிவிடும். மூத்த சகோதர- சகோதரிகள் வகையில் நன்மைகளும் உதவியும் எதிர்பார்க்கலாம். செய்தொழிலில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றியும் காணலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உருவாகும். திருமணமாகிப் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்றுசேர்வர். சிலருக்கு ஜோதிடம், ஆன்மிகம் போன்ற துறையில் ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குச் சித்தியும் உண்டாகும். பொருளாதாரத்தில் தாராளமான வரவு- செலவுகளும் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இம்மாதம் 3-ல் இருந்த சனி இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறுவார். சிம்ம ராசிக்கு 6-ஆம் இடம், 10-ஆம் இடம், ஜென்ம ராசியையும் பார்க்கிறார். எதிரி, போட்டி, பொறாமை எல்லாம் இல்லாமல் போய்விடும். கெட்ட கிரகம் கெட்ட இடத்தைப் பார்ப்பதால் கெட்ட பலன்கள் கெட்டுப்போகும் என்பது கருத்து. தொழில்துறையில் நிலவிய தொய்வுகள் சரிசெய்யப்பட்டு சீர்திருத்தமும் செய்யலாம். வியாபார விருத்திக்கான திட்டங்கள் நிறைவேறும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். முயற்சிகள் வெற்றியடையும். மனதிற்கினிய நிகழ்வுகள் நடக்கும். கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு நிவர்த்தி போன்ற பலன்கள் உண்டாகும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிக்களின் தொடர்பும் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த மாதத்தோடு ஏழரைச் சனி முழுமையாக விலகுகிறது. கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் தீர்ந்து நட்பும் நல்லிணக்கமும் உருவாகும். வாழ்க்கைத் துணையின் சொந்தங்களால் பல நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எனவே குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் தடையின்றி துரிதமாக நடக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். பதவி உயர்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு காலதாமதமில்லாமல் உடனடியாக பதவி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மையும் தீமையும் கலந்த பலனை அனுபவிக்கலாம். சிலருக்கு பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் உருவாகலாம்; எச்சரிக்கை அவசியம்.
துலாம்
துலா ராசிக்கு ஜென்மத்தில் இருந்த சனி இம்மாதம் 2-ஆம் இடத்துக்கு மாறுகிறார். குடும்பத்தில் திடீர் திடீரென சிற்சில பிரச்சினைகளும் சச்சரவுகளும் உண்டாகும். ஆனால் பெரிதளவில் வெடித்துச் சிதறுமளவு போகாது. தொழில்துறையில் புதிய முறைகளைக் கையாளலாம். குடும்பத்திலுள்ளவர்களின் தேவைகளையறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். தந்தையால் பின்வயதில் அனுகூலமும், பூர்வீகச் சொத்துகளும் கிடைக்கும். இருசக்கர வாகனம் வைத்திருப்போர் நான்கு சக்கர வாகனம் வாங்கலாம். அதற்காக கடனும் வாங்கலாம். அது சுபக்கடன் எனப்படும். சனிக்கு 9-ல் குரு உச்சம்பெறுவது நல்லது. தந்தையின் உடல்நிலை, பொருளாதாரம் இவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 12-ல் விரயச் சனியாக இருந்த ஏழரைச் சனி இப்போது ஜென்மச் சனியாக மாறுகிறார். முதல் சுற்று நடப்பவர்களுக்கு திருமணத்தடையும் தாமதமும் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு பிரிவினையும் பிளவும் மனக்கிலேசமும் உருவாகலாம். ஜென்மச் சனி சீரழிக்கும் என்பது பொது விதியானாலும், விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு 9-ல் உச்சம்பெற்று உங்கள் ராசியையும் அங்குள்ள சனியையும் பார்ப்பதால், எந்தப் பிரச்சினையானாலும் அதை எளிதாகக் கையாண்டு சமாளித்துவிடலாம். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவிலும் தடை, தாமதம் ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சியும் நம்பிக்கையும் பாதுகாப்பாக நின்று பரிபாலிக்கும்.
தனுசு
இந்த மாதம் உங்கள் ராசிக்கு 11-ல் இருந்த சனி இப்போது விரய ஸ்தனமான 12-ஆம் இடத்துக்கு மாறுகிறார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது. தவிர்க்கமுடியாத செலவுகளையும் விரயங்களையும் ஏற்படுத்தலாம். சிலருக்கு சுபச்செலவாகவும் சிலருக்கு பயனற்ற விரயமாக வும் அமையலாம். சிலருக்கு வரவேண்டிய பணம் மொத்தமாக வரும். அதை வைத்து புதிய வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கலாம்; வீடு மாறலாம். சிலர் புதிய வேலை சம்பந்தமாக புதிய பயிற்சிக்குப் போகலாம். சிலர் வேலைமாற்றம், கூடுதல் சம்பளம்அல்லது ஏற்கெனவே உள்ள வேலையில் பதவி உயர்வு ஆகியவற்றை அடையலாம். விரயச் சனி என்பதால் ஒரு வேலையை இருமுறை செய்யும் நிலையும் உண்டாகலாம். இதனால் காலவிரயமும் பணவிரயமும் உண்டாகலாம்.
மகரம்
இந்த மாதம் சனி (டிசம்பர் 16-ல்) உங்கள் ராசிக்கு 10-ல் இருந்து 11-ஆம் இடம் லாப ஸ்தானத்துக்கு மாறுகிறார். உங்கள் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை எல்லாம் மேலோங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் கிடைக்கும். 9-ல் உள்ள ராகு சனியைப் பார்ப்பதால் பூர்வீக சொத்து களால் லாபம் உண்டாகும். வம்பு, வழக்கு ஆகியவற்றின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். எல்லாவகையிலும் லாபம் பெருகும்; வெற்றி உண்டாகும். மூத்த சகோதர வகையில் பிரச்சினைகள் உருவாகி மறையும். குரு பார்வையால் தீர்வும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்களை சந்திக்கலாம். சிலருக்கு உடல்நலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம். உணவு வகைகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நன்மை வகுக்கும்.
கும்பம்
இந்த மாதம் டிசம்பர் 16-ல் சனி பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த சனி 10-ஆம் இடத்துக்கு மாறுவார். ராசிநாதன் 10-ஆம் இடத்துக்கு அனு கூலத்தையும் வெற்றியையும் திருப்தியையும் தருவாரென்று எதிர்பார்க்கலாம். தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் நிலவிய பிரச்சினைகள் விலகும். வேலை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். தொழில் இல்லாமலிருப்பவர்களுக்கு தொழில் அமையும். தொழில்துறையில் ஏற்பட்ட போட்டி, பொறாமைகள் நீங்கும். வியாபார விருத்திக்கான திட்டங்கள் செயல்படும். குடும்பாதிபதி குடும்பத்தைப் பார்ப்பதால், கூட்டுக்குடும்பத்தில் நிலவிய குழப்பங்களுக்கு நிவர்த்தி உண்டாகும். பிரிந்துபோனவர்களும் ஒன்றுசேர்வார்கள். பிரிந்த குடும்பம் இணைந்து சுபமங்கள காரியங்களை சேர்ந்து செயல்படுத்தி சிறப்பு பெறலாம்.
மீனம்
இதுவரை இரண்டரை ஆண்டுகாலமாக 8-ல் இருந்த சனி இந்தமாதம் 9-ஆம் இடத்துக்கு மாறுவார். எனவே அட்டமத்துச் சனியிலிருந்து விடுதலை கிடைக்கப்பெறுவீர்கள். 9-ல் வரும் சனி உங்களுக்கு பாக்கியத்தையும் யோகத்தையும் செய்வார். மீன ராசிக்கு 11, 12-க்குடையவர் 9-ல் வந்திருப்பதால் பூர்வ புண்ணிய பாக்கியத்தால் லாபம், விரயம் இரண்டையும் செய்வார். லாபகரமான முதலீடுகளைச் செய்யும் சூழ்நிலையும் அமைப்பும் உருவாகும். ஜென்மத்தில் கேது நிற்பதால் சிலருக்கு காரணமில்லாத கவலைகளும் டென்ஷன்களும் ஏற்படும். சகோதர- சகோதரி வகையில் சகாயமும் உதவியும் அனுகூலமும் உண்டாகும். சிலசமயம் அவர்கள் வகையில் லாபமும் உண்டாகும். விரயச் செலவும் உண்டாகும். வீண்செலவல்ல; சுபச்செலவு.
0 Facebook:
Post a Comment