எல்லாவற்றுக்கும் ஒரு யோகம் வேணுமப்பா’ என்பார்கள் கிராமப்புறங்களில்! மனிதனின் சாதனைக்கும், உயர்வுக்கும் உரிய காலத்தை 'யோக காலம்’ என்றும் சொல்லி வைத்தார்கள். ஜோதிடம் சார்ந்த ஞானநூல்களும் கிரக அமைப்புகளைக் கொண்டு பல்வேறு யோகங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றுள் சில யோகங்கள்...
( இசை யோகம்... )
சாம்ராஜ்ய யோகம்: லக்னம் கன்னியாக அமைந்து, சனி 10-ம் பாவத்திலும், சுக்கிரனும் புதனும் 5-ம் பாவத்திலும், குருவும் சந்திரனும் 7-ம் பாவத்திலும் இருந்தால், சாம்ராஜ்ய யோகம் ஏற்படும். செல்வம், செல்வாக்கு ஓங்கும். அதேபோன்று, லக்னத்துக்கு 7, 9-ம் பாவாதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், அரசாளும் யோகம் உண்டாகும்.
மிருதங்க யோகம்: 11-ம் பாவாதிபதியானவர் சுக்கிரனுடன் சேர்ந்து உச்சம் பெற்றிருக்க, அந்த ராசிக்கு உடையவர் 4, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால், மிருதங்க யோகம் ஏற்படும். இதன் பலனாக, எல்லோரையும் வெல்லும் திறமை உண்டாகும். மத்திய வயதில் யோக பலனை அனுபவிப்பார். செல்வம் சேரும்.
நாக யோகம்: 10-ம் பாவாதிபதி நின்ற அம்சாதிபதியும், லக்னாதிபதியும் லக்னத்தைப் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ நாகயோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ள ஜாதகர் அதிகம் படித்தவராக, தர்மத்தின் வழியில் நடப்பவராக இருப்பார். சுகமான வாழ்க்கை அமையும்.
9-ல் குரு, 10-ல் பாவாதிபதி, 7-ல் சந்திரன் சுபக் கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் நாக யோகம் உண்டாகும். இதனால், இளம் வயதிலேயே செல்வம் ஈட்டுபவராக ஜாதகர் திகழ்வார். சுகமான வாழ்க்கை அமையும்.
பதும யோகம்: 9-ல் சுக்கிரன் இருக்க, 9ம் பாவாதிபதி வளர்பிறைச் சந்திரனுக்கு 9-ல் இருக்க, பதும யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்களுக்கு, மந்திரி ஸ்தானத்தில் உள்ளவரும் நட்பாக இருப்பார்.
வீணை யோகம்: லக்னம் முதற்கொண்டு 7-ம் இடம் வரை வரிசையாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பின், வீணை யோகம் ஏற்படுகிறது. இதனால் சங்கீதத்தில் சிறப்புற்றுத் திகழ்வார்கள். நல்லொழுக்கமும் சாமர்த்தியமும் அதிகம் இருக்கும்.
- ஜோதிடர் டி.செல்வக்குமரன்