நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும் பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் பெயர் பகவதியார்.
இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு, இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க, பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால் வேதநெறி குன்றியது.
இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும் திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன. சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும் அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச் சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப் பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர்.
இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம் பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர். திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர் இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத் திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார் கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய் அவதாரம் செய்தார்.
செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும் பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன் பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும், அணிமிகும் தொட்டிலிலும் விளையாடினான்.
செங்கீரை, சப்பாணி, அம்மானை முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப் பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல் வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று.
வழக்கம்போல் சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப் புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப் பழிக்கக் கூறி நின்றான்.
மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர் தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக் குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும் முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.
எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.
குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார்.
அப்பொழுதே சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார். குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர். ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால் வழிவதனையும் கண்டார்.
அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை கடுங்கோபத்தோடு பார்த்தார். கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர் விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது.
சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார்.
தாம் பாடும் தமிழ்மறை பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார். செயலற்று நின்றார்.
அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக் கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால் உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக் கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார்.
தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது. ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின் வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும் எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய திறத்தினை மொழிந்தார்.
தொடரும் ..........