Banner 468 x 60px

 

Monday, February 2, 2015

தைப்பூசம்


தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். சிவாகமங்களில்,  ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நட்சத்திரத்தை 'மாஸபம்’ என்பார்கள். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. 'புஷ்ய மாஸே து புஷ்யர்க்ஷே குர்யாத் க்ஷேளத்ராபிஷேசனம்’ (காமிகாகமம்) என்று தேன் அபிஷேகம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது.

( பிப்ரவரி 3  (Tuesday) 2015 அன்று   தைப்பூசம் )

சூல விரதம்!

சைவர்கள் சிறப்பாகப் போற்றும் எட்டு மகா விரதங்களில் சூல விரதமும் ஒன்று. மார்கழி திருவாதிரையில் தனித்து ஆடுகிற சிவனார், தைப் பூசத்தில், உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமையருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது.

அகத்திய மகரிஷி தந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை காவடி போன்று தூக்கி வந்த இடும்பன் என்ற அசுரனை ஆட்கொண்ட கலியுகக் கடவுள் கந்தப்பெருமான்! கவலைகள் மலையைப் போன்று இருப்பதால், அவற்றை எம்மிடம் அளித்து நீ கவலையற்று இரு என்று உணர்த்தி எந்த அடியை தொழுதால் இவ்வுலகம் காப்பாற்றப்படுகிறதோ அவருக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடச் சிறந்த நாள்!

இரண்யவர்மன் எனும் அரசன் தில்லையில் ஆனந்த நடராஜருக்கு அர்ப்பணித்த திருப்பணிகளால் மகிழ்ந்த கூத்தபிரான், அந்த மன்னனுக்கு ஆனந்தக் காட்சி அளித்த நாளும் இதுவே!  
பொதினி என்று போற்றப்படும் பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!



ரத ஸப்தமி!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமும்கூட!
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி, மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று பகலவனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!
எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!


பீஷ்மாஷ்டமி!

ன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!
எப்படி தொலைபேசியில் ஒருவரின் எண்ணை டயல் செய்தால் அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவருடன் பேச முடிகிறதோ, அதுபோன்று நம் முன்னோர்கள், இந்த நாட்களில் இவரிவர் குறித்து இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அதன்படி அந்தந்தக் கிரியைகள் தனிச் சிறப்பு கொண்டவை என்பதை  அறிந்து, உணர்ந்து, புரிந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நீங்களும் உறுதிபடச் சொல்வீர்கள்!
 
ஆன்மிகம் © 2011 - WebSite & Designig by Yazhini